சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று தொடங்க உள்ளது. இப்போட்டியின் தொடக்க விழா நேரு விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைப்பெற உள்ளது. இந்தியாவில் முதல் முறை நடைபெறுவதால் உலக நாடுகளின் பார்வை அனைத்தும் சென்னை பக்கம் திரும்பி உள்ளது. பழமையாகவும், பெருமையாகவும் இந்த செஸ் ஒலிம்பியாட் தொடர் கருதப்படுகிறது ஏனென்றால் இது செஸ் விளையாட்டின் ஒலிம்பிக் எனவும் கூறலாம். மொத்தமாக 187 நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் சென்னையில் உள்ள மாமல்லபுரத்திற்கு வருகைத் தந்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி இத்தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இதனால் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, மேலும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர். மேலும் ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் ஏற்கனவே கருப்பு வெள்ளையில் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. மேலும் இப்போட்டியின் சின்னமான ‘செஸ் தம்பி’ சின்னமும் பிரபலமானது. இந்த சின்னத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எங்கும் எதிலும் பகிரப்பட்டு வந்தது.

மேலும் விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி சாதாரண மக்களும் இப்போட்டியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Curtain Raiser Rapid Rating Chess என கூறப்படும் இந்த சுற்றில் வெளியாட்கள் கலந்து கொள்ளலாம். இந்த சுற்றில் வெற்றிப்பெறுவோருக்கு 5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். மிக பிரமாண்டமாக தொடங்க இருக்கும் இப்போட்டி நாளை தொடங்கி தொடர்ந்து 14 நாட்கள் நடைபெற உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுவதால் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி இந்தியா அணியை வெற்றி பெற செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
