நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு தேதி வெளியாகி உள்ளது. நெல்சன் திலிப் குமார் இயக்க உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சொல்லப்பட்டு வந்தது. ‘பேட்ட’ மற்றும் ‘தர்பார்’ படங்களைத் தொடர்ந்து இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் 3வது முறையாக இசையமைக்க உள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ப்ரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் பிரபல கன்னட நடிகரான சிவ ராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் தொடர்பான முதல் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதற்காக சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் டெல்லிக்கு சென்று இருந்தார். இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் அவர்கள் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை சென்னையின் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து இருந்தார்.

பிறகு தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். “தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை சந்தித்தேன். அவர் வட இந்தியாவில் பிறந்து இருந்தாலும் தமிழ்நாட்டை மிகவும் நேசிக்கிறார். தமிழக மக்களின் கடின உழைப்பும், நேர்மையும் அவருக்கு பிடித்து உள்ளது. மேலும் தமிழக மக்களின் ஆன்மிக உணர்வுகளும் பிடித்து உள்ளது” என கூறினார்.

மேலும் செய்தியாளர் ஒருவர் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? என எழுப்பிய கேள்விக்கு இந்த மாதம் 15ஆம் தேதி இல்லை 22ஆம் தேதி தொடங்கும் என கூறியுள்ளார். இந்த செய்தியால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.