மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு மீறல் ஆகியவற்றை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டமானது இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற இப்போராட்டத்தில் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசு பொறுப்பேற்று 14 மாதங்கள் ஆகியுள்ளது. ஆட்சியேற்ற நாளில் இருந்து மக்கள் ஏராளமான துன்பங்களை பெற்று வருகின்றனர். மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் சொத்துவரி உயர்வு இவற்றை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இப்போராட்டத்தை பார்த்து முதல்வர் ஸ்டாலின் நடுங்கி கொண்டுள்ளார். தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற பாடுபட்டவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆவார், கருணாநிதியால் அதை செய்ய முடியவில்லை என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், உங்களுடைய ஆட்சியானது மக்களை காப்பதற்காகவே தவிர எதிர்கட்சியை அழிப்பதற்கு அல்ல என கூறினார். மேலும் அதிமுக மக்களுக்கான கட்சி எனவும், அதிமுக ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தவில்லை எனவும் கூறினார். 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கிய கட்சி ஆனால் திமுக இரக்கம் இல்லாமல் மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளது என கூறினார்.

அதிமுக அலுவலகத்தை தாக்கிய சதிகாரர்கள் யாரென்று உங்களுக்கு தெரியும். திமுகவின் கைக்கூலியாக சிலர் செயல்படுகின்றனர், மேலும் அந்த துரோகிகளுக்கு பாடம் கற்பிப்போம் எனவும் தெரிவித்தார். தொடந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.