நடிகர் அருண் விஜய் நடித்து கூடிய விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘சினம்’. இப்படத்தில் அருண் விஜய், பல்லாக் லால்வானி, காளி வெங்கட் ஆகியோர் நடித்து உள்ளனர். குமாரவேலன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஷபீர் தபேர் ஆலம் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது.

அருண் விஜய் தற்போது வித்யாசமான படங்களில் நடிப்பதை தனது ஸ்டைலாக வைத்துள்ளார். என்னதான் இவர் தமிழ் சினிமா துறைக்கு வந்து பல வருடங்கள் ஆனாலும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி கொண்டு இருக்கிறார். சினிமாவால் அறிமுகமாகி பல வருடங்களாக இவரது படங்கள் எது மக்களிடம் வரவேற்பை பெறவில்லை. 2012ஆம் ஆண்டு வெளி வந்த ‘தடையற தாக்க’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

அதன் பிறகு ‘என்னை அறிந்தால்’, ‘தடம்’, ‘குற்றம் 23’, ‘செக்க சிவந்த வானம்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது. இவர் கடைசியாக நடித்து வெளிவந்த ‘யானை’ திரைப்படமும் மக்களிடம் வரவேற்பு பெற்று வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து இவர் நடிக்கும் ‘சினம்’ திரைப்படம் அடுத்த மாதம் 16ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தில் போலீஸ் ஆபிஸராக வரும் அருண் விஜய் மர்மமாக நடந்த கொலையை கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். திரில்லர் பிலிம்மாக உருவாகி இருக்கும் இப்படத்தின் ட்ரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இவர் இதற்கு முன் போலீசாக நடித்த ‘குற்றம் 23’ திரைப்படம் போலவே இப்படமும் மாபெரும் வெற்றி அடையும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
