கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதினால் பரபரப்பிற்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. இன்று நடைப்பெறும் ஆசியக்கோப்பை 2022 தொடரின் இரண்டாம் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது. ஐ.சி.சி உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே இவ்விரு அணிகளும் விளையாடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக நடைப்பெற்ற உலக கோப்பை போட்டியில் இந்தியா அணி தோல்வி அடைந்தது. அதற்கு பிறகு இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். அதன் பிறகு தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இன்று அவர் பாகிஸ்தானோடு தனது 100வது T20I போட்டியில் விளையாட உள்ளார். சில நாட்கள் ஓய்வு எடுத்த நிலையில் விராட் கோஹ்லி களம் இறங்க உள்ளதால் ரன்கள் குவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா அணி களம் இறங்க உள்ளது. இந்தியா அணி சார்பாக ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் டாப் ஆர்டரில் சிறப்பாக செயல்பட வேண்டும். மிடில் ஆர்டரில் ரிஷப் பந்த், சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் அணி சார்பாக கேப்டன் பாபர் அசாம் மற்றும் முஹம்மத் ரிஸ்வான் நல்ல ஃபார்மில் உள்ளனர். மேலும் தரமான பௌலர்களும் உள்ளனர். இன்று நடக்கும் போட்டி பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என பார்க்கப்படுகிறது.