அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சை காரணமாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு இருந்தது. கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்திற்கு பிறகு கடும் மோதல் இரு அணிகளுக்கு இடையே ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ் அணியின் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தை அடித்து நொறுக்கினர் மற்றும் வாகனங்கள் பல சேதம் அடைந்தது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். பிறகு நீதிமன்ற உத்தரவை அடுத்து அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சி.வி.சண்முகம் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் அலுவலகத்தில் பல பொருட்கள் காணவில்லை என்றும் , மேலும் அதிமுகவின் முக்கிய கோப்புகள் காணவில்லை என புகார் அளித்தார். இதை தொடர்ந்து இந்த பொதுக்குழு செல்லாது என கூறிய ஓ.பி.எஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவித்தார். தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வத்திற்கும் சாதகமாக அமைந்தது. இதை எதிர்த்து எடப்பாடிபழனிச்சாமி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தனி நீதிபதி தீர்ப்பு வழங்கி இருந்தார். ஆனால் இன்று விசாரித்த போது இந்த தனி நீதிபதி தீர்ப்பானது செல்லாது என இரண்டு அமர்வு நீதிபதிகள் அறிவித்து உள்ளனர். இதனால் ஈ.பி.எஸ் பொதுச்செயலராக செயல்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.