கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன் ஆகியோர் நடித்து வெளிவந்த திரைப்படம் ‘ஜிகர்தண்டா’. 2014 ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். தமிழ் திரை உலகில் ‘பீட்ஸா’ திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் கார்த்திக் சுப்புராஜ். முதல் படமே நல்ல வரவேற்பு பெற்று வெற்றி அடைந்தது. அவரது இரண்டாம் படம்தான் ‘ஜிகர்தண்டா’. கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டு உருவான இப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. படத்தில் இயக்குனராக வரும் நடிகர் சித்தார்த் ஒரு நிஜ கேங்ஸ்டர் கதை செய்வதற்காக நண்பர் கருணாகரன் வீட்டிற்கு மதுரைக்கு வருகிறார். அங்கு அவர் சந்திக்கும் பிரச்சனை, படம் எடுத்தாரா? இல்லையா? மற்றும் சுவாரசியமாக நடக்கும் ட்விஸ்ட்தான் படத்தின் மீதி கதை.

‘அசால்ட் சேது’ என்ற கதாபாத்திரத்தில் வரும் பாபி சிம்ஹாவிற்கு இது அவருடைய கரியர் பெஸ்ட் படம் எனவும் கூறலாம். ஏனென்றால் இப்படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார். அப்போது 26 வயதான பாபி சிம்ஹா 40 வயது பயங்கர ரௌடியாக நடித்து இருந்தார். இவருடைய நடிப்பு பலரால் பேசப்பட்டது, மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பாராட்டை தெரிவித்து இருந்தார். முதல் இரண்டு படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்ற கார்த்திக் சுப்புராஜிற்கு அடுத்தடுத்த படங்கள் எடுபடவில்லை. ‘இறைவி’, ‘மெர்குரி’ படங்கள் தோல்வி படங்களாகவே அமைந்தன.

அதற்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து எடுக்கப்பட்ட ‘பேட்ட’ திரைப்படம் நல்ல படமாக அமைந்தது. அதன் பிறகு வெளியான ‘ஜகமே தந்திரம், மற்றும் ‘மகான்’ திரைப்படங்கள் பெருசாக ஜொலிக்கவில்லை. தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ‘8 years of jigarthanda’ என்ற விடியோவை பகிர்ந்து உள்ளார். ஜிகர்தண்டா படத்தின் ஒரு சிறிய மேக்கிங் விடீயோவின் கடைசியில் இரண்டு ஜிகர்தண்டா உள்ளது போல் முடித்து உள்ளார். இதன் மூலம் ஜிகர்தண்டா – 2 விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.