இந்தியாவின் ஜனாதிபதி தேர்தல் கடந்த 18ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைப்பெற்றது. தேர்தல் வேட்பாளர்களாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து திரௌபதி முர்முவும் எதிர்கட்சியின் வேட்பாளராக யஸ்வந்த் சின்ஹவும் போட்டியிட்டனர். இந்தியாவின் அனைத்து இடங்களிலும் நடைப்பெற்ற தேர்தலானது முடிந்த பிறகு வாக்குசீட்டுகள் டெல்லிக்கு பாதுகாப்புடன் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் நடந்த இத்தேர்தலில் 99% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைப்பெற்றது. தேர்தல் கணிப்புகள் பல திரௌபதி முர்முவுக்கு சாதகமாகவே இருந்தது.

அதே போல் இன்று காலையில் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திரௌபதி முர்மு முன்னிலையில் இருந்தார். மேலும் அடுத்தடுத்த கட்டத்தில் முன்னிலை வகித்த நிலையில் 50% வாக்கை திரௌபதி முர்மு கடந்ததால் அவர் அடுத்த ஜனாதிபதி என்பது கிட்டத்தட்ட உறுதி ஆகி உள்ளது. தற்போதைய ஜனாதிபதியான ராம் நாத் கோவிந்தின் பதவிக் காலமானது ஜூலை 24ஆம் தேதியுடன் முடியவிருக்கும் நிலையில் இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதியாக வரும் 25ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டெரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
