கள்ளக்குறிச்சியில் உள்ள சின்னசேலம் கிராமத்திற்கு அருகே உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார் மாணவி ஸ்ரீமதி. இவர் மர்மமான முறையில் கடந்த 13ஆம் தேதி இறந்து போனார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் மாணவர் அமைப்பினர் நீதி கேட்டு போராடி வந்தனர். மேலும் இப்போராட்டம் கலவரமாக மாறியது. நடைப்பெற்ற வன்முறையில் தனியார் பள்ளியின் பேருந்து பலவற்றை கொளுத்தினர். மேலும் பல ஆவணங்களை எரித்து, கற்களை வீசி தாக்கியதால் காவலாளர்கள் காயம் அடைந்துள்ளனர். இது தமிழ்நாட்டில் பேசு பொருள் ஆனது, மேலும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். சமூக வலைத்தளங்களில் பலர் தங்கள் ஆதங்கத்தை செலுத்தி வந்தனர். மேலும் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாணவியின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட பட்டிருந்தது. பிறகு இந்த விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மாணவியின் தரப்பினர் பிரேத பரிசோதனை முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டை எழுப்பினர். அதற்கு நீதிபதி உங்களுக்கு எப்படி பிரேத பரிசோதனை சரியாக நடக்கவில்லை என்று தெரியும் நீங்கள் என்ன நிபுணரா? என சரமாரி கேள்வி எழுப்பினர், மேலும் சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது. இதைப் பார்த்தால் திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது என கூறினார்.

பெரும் பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காவல்துறையினர் மாணவியின் கிராமத்திற்கு சென்று நாளை நடைப்பெறும் இறுதிச்சடங்கில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் வெளியூரில் இருந்து யாரும் கலந்து கொள்ள கூடாது. தயவு செய்து காவல் துறைக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என ஒலிபெருக்கியில் அறிவித்தனர். இந்நிலையில் மாணவியின் உடல் போலீஸார் பாதுகாப்புடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர்.