சென்னையில் உள்ள வேளச்சேரியில் குருநானக் கல்லூரியில் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, அவ்விழாவில் அவர் உரையாற்றினார். மேலும் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார் ஸ்டாலின் அதில் அவர் கூறியதாவது, “தற்கொலை எண்ணம் கூடவே கூடாது, தலை நிமிரும் எண்ணம்தான் இருக்க வேண்டும். உயிரை மாய்த்து கொள்ளும் சிந்தனை கூடாது, உயிர்த்தெழும் சிந்தனையே வேண்டும். பெற்றோர்களாக இருந்தாலும் ஆசிரியர்களாக இருந்தாலும் மாணவ மாணவிகளிடம் மனசு விட்டு பேசுங்க. அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

சிறிது நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் நான் பாதிக்கப்பட்டிருந்தேன். இன்னும் சில தினங்களுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள், ஆனால் நடுவில் சில அரசு விழாக்களில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. கொரோனா நோயால் எனது தொண்டை பாதிக்கப் பட்டுள்ளது. தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கக்கூடாது என்பதற்காக நான் எனது பணியை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறேன். இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் சொல்ல போனால் இந்த விழாவில் கலந்து கொள்ள எனக்கு எல்லா உரிமையும் உள்ளது ஏனெனில் இந்தக் கல்லூரி தொடங்கிய போது திமுக ஆட்சியில் இருந்தது. இப்போது 50 ஆண்டுகள் கடந்து உள்ளது, இப்போதும் திமுக ஆட்சியில் உள்ளது.

மேலும் இக்கல்லூரி கட்டப்படுவதற்கு தேவையான 25 ஏக்கர் நிலத்தை திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. நான் மேயராக இருந்த போது 7 ஆண்டுகள் இங்கேயே இருந்தேன், கிரிக்கெட், ஷெட்டில் போன்ற விளையாட்டுக்கள் விளையாண்டு உள்ளேன். அண்மைக் காலத்தில் தமிழ் நாட்டில் நடந்த சில நிகழ்வுகளை பார்க்கும் போது எனக்கு மிகுந்த மன வேதனையாக உள்ளது. கல்வி நிறுவனங்களை நடத்துகிறவர்கள், அதை வர்த்தகமாக பார்க்காமல், சேவையாக பார்க்க வேண்டும். பட்டங்களை பெற மட்டும் மாணவர்கள் கல்லூரிக்கு வரவில்லை. முதலில் தன்னம்பிக்கை, தைரியம், மனஉறுதி ஆகியவற்றை கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளுமாறு மாணவர்கள் வளர வேண்டும்.” என இவ்வாறு அவர் கூறினார்.