சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று தொடங்கியது. இப்போட்டியின் தொடக்க விழா நேரு விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக பல கண்கவர் கலை நிகழ்ச்சிகளோடு தொடங்க உள்ளது. இந்தியாவில் இந்த செஸ் தொடர் முதல் முறை நடைபெறுவதால் உலக நாடுகளின் பார்வை அனைத்தும் சென்னையின் மாமல்லபுரத்தில் பக்கம் திரும்பி உள்ளது. மொத்தமாக 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள், வீராங்கனைகள் சென்னையில் உள்ள மாமல்லபுரத்திற்கு வருகைத் தந்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி இத்தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள உள்ள உள்ளதால் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, மேலும் ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று மாலை சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். இதில் என்ன ஸ்பெஷல் என்றால் பொதுவாக அவர் அணிந்து வரும் ஆடையில் வராமல் கறை வேட்டி சட்டை மற்றும் துண்டில் வந்ததால் அனைவரும் ஆச்சர்யமாக பார்த்தனர், மேலும் அவரை அனைவரும் உற்சாகமாக வரவேற்றனர்.

அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர் பாலு, டி.ஜி.பி சைலேந்திர பாபு, இறையன்பு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக சார்பாக நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். இந்த தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முக்கியமான அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இப்போட்டியானது நாளை தொடங்கி தொடர்ந்து 14 நாட்கள் வரை நடைபெற உள்ளது. எந்த நாட்டின் அணி மொத்தமாக அதிகப்புள்ளிகள் பெறுகிறதோ அந்த அணி வெற்றி பெற்ற அணியாக கருதப்படும்.
